பிரபல யூடியூபரும் சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் செய்திவாசிப்பாளர் ஒருவர், சவுக்கு சங்கர் தனக்கு எதிராக அவதூறாகவும் பெண் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் பேசியதாக அளித் புகாரின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 (பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் குற்றவாளி என அதிரடியாகத் தீர்ப்பளித்தது.
குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குச் சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் செய்திவாசிப்பாளர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும் ஊடக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
