சிந்துவெளி நாளைக் கொண்டாடும் நாளில் ஏன் பீல் பழங்குடிகளைப் பற்றிப் பேச வேண்டும்?
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று மறுக்க முடியாத தரவுகளோடு தொடர்ந்து முழங்கி கொண்டிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் ஏன் சிந்துவெளி நாளில், பெரும்பாலும் இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியினை பேசக்கூடிய பீல் பழங்குடிகளைப் பற்றிப் பேச வேண்டும்?
ஏனெனில் பீல் பழங்குடிகள் தங்களை ஏகலைவனின் வழித்தோன்றலாக நினைவு கூர்பவர்கள்.
பீல் எனும் இனப் பெயரே வில் எனும் திராவிட மொழிக் குடும்பச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது. அதோடு, இரு சொற்களும் ஒரே பொருளினைச் சுட்டும் சொல்லாக இருப்பதால்…
ஏனெனில் குஜராத்தில் பீல் பழங்குடிகள் வசிக்கும் பகுதிகள் பிந்தைய ஹரப்பா பண்பாட்டு தளத்திற்கு அருகிலிருப்பதால்…
வில் ஏன் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது?
ஏனெனில், வில் சேரனின் கொடியில் மட்டுமல்ல, சிந்துவெளி முத்திரையிலும் இருக்கிறது.
சங்க இலக்கியம் வில்லன்களையும் வில்லிகளையும் கொண்டாடுகிறது.
வில்லன் வில்லி என்பது திரைப்படங்களில் காணும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்ல. எதிரில் இருக்கும் சிறு புள்ளியில் குறியை தவறாமல் தாக்கும் பெரும்புள்ளி என அர்த்தம்.
ஏகலைவன் ஏன் இங்கு குறியீடாக முன்னிறுத்தப்படுகிறான்?

ஏனெனில் ஆதிக்க சக்தியின் அதிகாரங்கள் எக்காலத்திலும் மற்றவர்களை நசுக்கும் என்பதற்குச் சான்றாய் தன் கட்டை விரலை பலி கொடுத்தவன்.
அதிகாரங்கள் கட்டை விரலை வெட்டினாலும் வீழாமல் நீ மற்ற விரல்களால் வில்லை நாணிலேற்று என நான்கு விரல்களால் வில்வித்தை பழகியவர்கள் பீல் பழங்குடிகள்.
வருங்கால வாரிசுகளுக்கும் பழக்கியவர்கள். அநீதியாய் வெட்டப்பட்ட விரல்களை வேண்டாம் என விட்டு விட்டவர்கள்.
நகர்ந்து வந்தவர்களே நாகரிகம் படைத்தார்கள் என்பார் ஆர்.பாலகிருஷ்ணன்.
அதுபோல மொழியை கைவிட்டு வில் பெயர் கொண்ட வாழிடங்களை கைவிட்டு நகர்ந்தாலும் அம்மக்கள் தங்கள் கலாச்சாரம், பண்பாட்டு, திருமண முறைகளில் திராவிடத்தையே தழுவி நிற்கின்றனர்.
பீல் பழங்குடி ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகளின் எல்லைகளில் ஆரவல்லி, பவகாத் குன்று மலைத்தொடர்களில் வசிப்பவர்கள்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வசிக்கக்கூடிய இனமும் கூட, சுமார் 1.5 கோடி.
அவர்களின் நான்கு உட்பிரிவுகளில் 3-ம் 4-ம் திராவிடச் சாயலை மங்காமல் தனக்குள் சுமக்கின்றனர்.
உயரமான மலைக் குன்றுகளில் வசிப்பவர்கள் சமமாகத்தான் இருக்கிறார்கள்.

சமவெளிகளில் இருப்பவர்களிடம்தான் ஏற்றத் தாழ்வுகள் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதற்கு பீல் இனக்குழு பிரிவுகள் உயிர்ப்புள்ள சான்றாக இருக்கின்றன.
மேவாசி என்று அவர்கள் தங்களை சுட்டும் சொல் உயர்வான காடடர்ந்த பகுதிகளில் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல் வாழ்பவர்கள் என்பதை ஆழமாகச் சொல்கிறது.
ராஜஸ்தானில் இவர்கள் பேசும் பீலி மொழி மார்வாடியும் ராஜஸ்தானியும் கலந்ததாக, அடிப்படையில் இந்தோ ஆரிய மொழி குடும்பத்தைச் சார்ந்ததாக இருப்பினும், அவர்கள் பயன்படுத்தும் அடிப்படைச் சொற்கள், உறவுமுறை பெயர்கள், வழிபாட்டு முறைகள், நாட்டார் வழக்காறுகள் இன்னும் மிஞ்சியிருக்கின்றன.
பீல் பற்றிய ஆய்வு ஏன் முக்கியம்?
குஜராத்தில் இவர்கள் வாழுமிடம் ஹரப்பா பண்பாட்டு தலத்தினருகில் இருக்கிறது.
ஹரப்பா போன்ற நகர்மய பண்பாடுகள் திடீரென்று முளைப்பதும் இல்லை ஓரிரவில் அழிந்து போவதுமில்லை. அத்தகைய வாழ்வியல் தொடர்ச்சிக்கு பீல் ஒரு நிகழ்வு ஆய்வு (case study).
பீல் பழங்குடியினரின் பண்டைய தொல்மொழி இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல. இந்தோ-ஆரிய மொழி இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே வாசித்தவர்கள் இவர்கள்.
ஆக, இவர்கள் பேசியது திராவிட அல்லது முண்டா மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கருத்து.
பீல் என்பதே வில் எனும் திராவிடச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்னும் கருத்தை 1876 ஜான் வில்சன் (Aboriginal Tribes of the Bombay Presidency) எனும் நூலில் முதன்முதலாக பதிவு செய்திருக்கிறார்.
ராஜஸ்தானில் பன்ஸ்வாரா மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் மங்கார் எனும் ஊரில் 1913 நவம்பர் 17 ல் பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் உள்ளூர் அரசர்களின் அடக்குமுறைக்கு எதிரான பீல் சமூகத்தினரின் மாநாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 1500 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இது ‘மங்கார் படுகொலை’ என்றும் ‘ஆதிவாசி ஜாலியன் வாலாபாக் படுகொலை’ என்றும் அழைக்கப்படுகிறது. நினைவிடமும் உள்ளது.
ஏகலைவன் வெறும் இதிகாசப் பாத்திரமல்ல. இன்று வரை உடன் நடக்கும் உயிர்ப்புள்ள குறியீடு. அவனை அவர்களின் வஞ்சிக்கப்பட்ட மூதாதையராக கருதுகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் பகுதியில் மக்கள் தங்களது கட்டை விரலை பயன்படுத்தாமல், நான்கு விரல்களை பயன்படுத்தியே வில்வித்தை செய்யும் மரபுள்ளது.
இது கட்டைவிரல் போனாலும் வில்வித்தை போகாது என்று சொல்லும் கூட்டுத் தெனாவட்டு. பழைய காயத்தைப் புதுப்பித்து, எச்சரிக்கை உணர்வை எதிர்கால தலைமுறைக்கு விதைக்கின்றனர்.
ராமாயண சபரியின் பீல் தொடர்பு.
மோதலை முனைமழுங்கச் செய்ய அதிகாரம் கடைபிடிக்கும் உலகளாவிய உத்தி மேனிலையாக்குதல்.
அப்படித்தான் ராமாயணத்தில் வரும் சபரி எனும் பழங்குடி பெண் தரும் எச்சில் பழத்தை ராமன் ஏற்றுக்கொண்டதாக்கி பக்திமயத்தால் பழங்குடி விளிம்பு மக்கள் செரிக்கப்படுகிறார்கள்.
பீல் தாயகமும் அகஸ்தியர், பரசுராமர் தொன்மங்களும்.
பண்டைய இந்தியாவில் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்பின் இந்தோ ஆரிய மொழி விரிவாக்கத்தின் இருபெரும் பாத்திரங்கள் அகஸ்தியரும் பரசுராமரும்.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் சத்திரியர்களை ஒழிக்கக் கங்கணம் கட்டி கிளம்பியபோது தப்பித்து வந்த சத்திரியர்களுக்கு தஞ்சம் அளித்தவர்கள் பீல் பழங்குடியினர்தானாம்.
அப்படி கலந்து உருவானவர்கள்தான் ராஜ்புத் பீல் போன்ற ஆண்ட பரம்பரை பிரிவுகள்.
மரபணுவியல் என்ற மகத்தான அறிவியல்
AASI (Ancient Ancestral South Indian) எனும் தொல் தென்னிந்திய மூதாதையர் அடி அடுக்கு வம்சாவளியை நவீன மரபணுவியல்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இதில் மகராஷ்டிரத்தில் வாழும் பீல் பழங்குடியினர்களிடையே நடந்த ஓர் ஆய்வில் 91% AASI மரபணு கண்டறியப்பட்டுள்ளது.
ஆக, இந்தோ ஆரிய மொழி பேசினாலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து இந்தியாவில் வசிப்பவர்கள் இவர்கள் என்பதை ஆய்வுகள் உரக்கச் சொல்கின்றன.
பில் பழங்குடியில் 1, 2, 3, 4 எனும் இனக்குழு பிரிவில் 3 மற்றும் 4 திராவிட இனக்குழுவோடு நெருக்கமாக உள்ளனர்.
அத்தை-மாமன் பிள்ளைகள் திராவிட திருமண முறையை விரும்புகிறார்கள். பீலி மொழியில் ஆய் என்றால் தாய், மோட்டி ஆய் என்றால் பாட்டி.
இவர்கள் திருமணச் சடங்குகளில் திராவிடப் பண்பாட்டைப் போல் தாய்மாமனுக்கு மிக முக்கிய இடமுண்டு.

குதிரையின் வருகை :
சிந்துவெளிப் பொறிப்புகளில் யானை, புலி, காளை, எருமை, ஆடு, மான், ஏன் காண்டாமிருகம் கூட உண்டு. ஆனால், குதிரைகள் இல்லை.
யுரேசிய புல்வெளியில் முதன்முதலாக பழக்கப்பட்ட குதிரை அதிகாரத்தின், ஆணவத்தின் குறியீடாக வருகிறது.
அதனால்தான் தலித் மாப்பிள்ளைகள் குதிரையில் ஊர்வலம் போனால் இன்றும் தாக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் புரவியெடுக்கும், அய்யனார் கோயில் சுடுமண் குதிரைகளைப் போல பீல் பழங்குடிகள் வாழும் நான்கு மாநிலங்களிலும் இதேபோல வழிபாடு இருக்கிறது.
புதுக்கோட்டை இளங்குடிப்பட்டி அய்யனார் புரவியெடுப்பு போல குஜராத்தில் போஷினா கிராமத்திலும் நடக்கிறது. ஆயிரக்கணக்கில் சுடுமண் குதிரைகள் தாய் தெய்வத்திற்கு காணிக்கையாக படைக்கப்படுகின்றன.
புரவியெடுப்பின் கூட்டு உளவியல்

குதிரை இல்லாதவர்களே தங்கள் காவல் தெய்வத்தை குதிரை மீது ஏற்றி வைத்தனர். தொன்மம் என்பது ஆடை அல்ல தோல். சொல் அல்ல மூச்சு. ஆயிரம் பெருங்கடவுள்கள் வந்து போனாலும் அடிமனதில் நிற்கிறது ஆதி நம்பிக்கை.
பீல் பழங்குடி கூட அப்படி ஒரு அடி அடுக்குதான். பெருங்கடவுள்கள் குதிரைப்பூட்டிய தேரில் வருவதற்கு முன்னரே மலையுச்சியில் வில்லேந்தி நின்றான் மலைக்கடவுள்.
அஸ்வமேத யாகம் நடத்தி ஆக்கிரமித்த அடாவடிக்கும், காவல் தெய்வத்திற்கு வாகனமாக சுடுமண் குதிரைகளைப் படையலாக்கிய பண்பாட்டிற்கும் இடையிலான உரையாடல்தான் இந்திய வரலாறு.
பீல் திராவிடத் தொடர்பு என்பது வில்லேந்தியவர்கள் என்கிற பெயரளவில் சுருங்கும் ஒற்றைப் புள்ளியல்ல.
அது இந்தியாவின் மிகப் பழமையான திராவிட பழங்குடி பண்பாடு மற்றும் உயிரியல் பெருவெளியின் ஆழமான வேர்நிலை தொடர்ச்சி.
– க. சுமித்ரா சத்தியமூர்த்தி
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்,
பட்டுக்கோட்டை.
