அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

அருணாச்சலப் பிரதேசத்தின் தக்ஸிங் (Taksing) பகுதியில் உள்ள ரோந்துப் புள்ளிகளைச் சீன ராணுவம் (PLA) கைப்பற்றியதாகப் அருணாச்சல மக்கள் கட்சி (PPA) குழு முன் வைத்த அறிக்கைகளை மத்திய அரசும், இந்திய ராணுவமும் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளன.

அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தின் தக்சிங் பகுதியில் உள்ள கள நிலவரத்தை மதிப்பிடுவதற்காக அருணாச்சல மக்கள் கட்சி முன்னாள் அமைச்சர் கஹ்ஃபா பெங்கியா, மக்கள் கூட்டணி துணைத் தலைவர் காலிங் ஜெராங், மற்றும் செயலாளர்கள் சோராங் கியோகாம், நாரா ஜிம்மி ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவினர் தாக்சிங், மாசா மற்றும் கலேமோவின் உள்ளூர் மக்களுடனும், அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மூத்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களுடனும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

2023-ல் இந்தியாவின் ‘ஷேரா-5’ (Shera-5) ரோந்துப் புள்ளியில் நடந்த மோதலில் இந்திய இராணுவம் பின்வாங்கிய நிலையில் அப்பகுதியைச் சீன ராணுவம் தடுத்துள்ளதாகவும், இந்திய ரோந்துப் படையினரால் விட்டுச் செல்லப்பட்ட அடையாளச் சின்னங்களை அழித்துள்ளதாகவும் பாரம்பரிய மேய்ச்சல் மற்றும் விலங்கு வேட்டை நிலங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் சீனா கொண்டு செல்வதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்த விரிவான அறிக்கையை அரசிடம் ஒப்படைத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், எல்லைப் பகுதிகளில் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகளின் இருப்பை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் வைக்கப் போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தக்ஸிங் (Taksing) பகுதியில் சீன ஊடுருவல் குறித்த அறிக்கைகள் அடிப்படையற்றவை மற்றும் தவறானவை என்று மத்திய அரசும், இந்திய ராணுவமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. மேலும் எல்லையில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும் கூறியுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட சீனாவுடனான முறையாக வரையறுக்கப்படாத ‘மெக்மஹோன் கோடு’ (McMahon Line) தொடர்பான நீண்டகாலப் பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது.

இந்தியா அங்கீகரிக்கும் இந்த உண்மையான எல்லைக்கோடு 1914-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவும், திபெத்தும் ஏற்படுத்திய சிம்லா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அப்போது நடந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற சீனா, ஒப்பந்தத்தை இன்றுவரை அங்கீகரிக்கவில்லை.

ஆகவே காலனித்துவத்தால் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இந்த எல்லைக் கோட்டை இன்றும் சீனா கருதி வருகிறது.

திபெத்தைச் சீனாவின் மாகாணமாக உரிமை கோரும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைச் தெற்கு திபெத் என்றும், அதன் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தனக்குச் சொந்தமானது என்றும் கூறிவருகிறது.

இதுவே, 1962-ல் சீனாவுடனான இந்தியப் போருக்கு வழிவகுத்தது. ராணுவ ரீதியாக சீனா போரில் வெற்றி பெற்றாலும், முறையான எல்லைக்கோட்டை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக் குழுவின் (WMCC) 36வது கூட்டத்திற்கு ஒரு நாள் கழித்து மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயரிடுவதன் மூலம், சீனாவின் உரிமை கோரலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இதில் முக்கியத்துவம் வாய்ந்த த்ஸோ லா, ரிஸா லா, புகூர் லா மற்றும் தாக் லா ஆகிய மலைப்பாதைகள்,சம்போ சரோவர் என்ற ஏரியும், இப்பகுதியில் இந்தியாவின் இராணுவ வரலாற்றையும் இருப்பையும் பறைசாற்றும் ஷேர்-இ-தாப்பா நினைவகமும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்ட சீனா மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வரும் பின்னணியில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வருவதற்கு 30 நாட்களுக்கு முன் இது நடந்திருப்பது அருணாச்சலம் மீதான நாட்டின் இறையாண்மையை இந்தியா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

You May Also Like

More From Author