17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 25 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11-ம் தேதி வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நடைபெற்ற யாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களுடன் சிவாச்சாரியார்கள் புறப்பட்டு, காலை 7.40 மணியளவில் அம்மன், சுவாமி தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, காலை 7.55 மணிக்கு அம்மன் சன்னதிக்கும், 8.10 மணிக்கு சுவாமி சன்னதிக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9 ஆயிரம் பக்தர்கள் கோயிலின் மேல் தளத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மாசி வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள், கும்பாபிஷேகத்தை பக்திப் பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.
மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயிலில் உள்ள 12 கோபுரங்கள், மதில் சுவர்கள், மரங்கள் மற்றும் பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் உட்புறத்திலும் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு 2 லட்சம் பிரசாதப் பைகள் வழங்கப்பட்ட நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
