தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து, 2023ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் எனவும், விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் எனவும் கூறி, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலை செய்ய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படப் போவதில்லை என அறநிலையத் துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டம் சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அருணாச்சலேஸ்வரர் கோவிலை விட்டு தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா என கண்டறிந்து தெரிவித்தால் அங்கு வணிக வளாகம் கட்டலாம் என்றனர். கோவிலுக்கு அருகில் கோவில் நிலமாக இருந்தாலும் சரி, அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி, எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவது போன்றவற்றுக்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என, இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறித்திய நீதிபதிகள், திருப்பதி கோவில் பராமரிப்பை உதாரணமாக சுட்டிக்காட்டினர். பின்னர் இந்த வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.