இலவசமாக ஐபோன்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்த அமிர்தசரஸைச் சேர்ந்த தொழிலதிபர் ராகேஷ் திரேஹான், ‘ராஜா டி கிங்’ என்ற பெயரிலும் அறியப்படுகிறார். முதலில் 100 ஐபோன்களை வழங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 10 பேருக்கு ஐபோன் 17 கருவிகளை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி முதலில் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பொதுஇடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படலாம், கூட்ட நெரிசல் உருவாகலாம் என்ற காரணத்தால் உள்ளூர் நிர்வாகம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை மாற்றி தனது வீட்டிலேயே ‘ஐபோன் விருந்து’ நிகழ்ச்சியை அவர் நடத்தியுள்ளார். இதில் 10 பேருக்கு ஐபோன் 17 வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
முதலில் 100 ஐபோன்களை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், பலர் தன்னை தொடர்புகொண்டு தகவல் கேட்டதாகவும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். சில தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உயர்தர ஐபோன் மாடல்களும் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் பெயர்களைத் தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அங்கேயே ஐபோன் வழங்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் முன்பு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் அதிகளவில் கூட்டம் கூட வாய்ப்புள்ளதாகவும், அதனால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுஇட நிகழ்ச்சி நடைபெறாமல், வீட்டுக்குள் குறைந்த அளவிலான நிகழ்ச்சியாக மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 100 ஐபோன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் 10 கருவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
