பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, உலகளவில் அடுத்த 6 மாதங்களில் (செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை) கடுமையான வெப்ப அலை வீசி சுமார் 4.5 லட்சம் (4,51,000) கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ‘கிளைமேட் இம்பாக்ட் லேப்’ (Climate Impact Lab) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் திடுக்கிடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இக்காலகட்டத்தில் வெப்ப நாள்களின் எண்ணிக்கை 44 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. தீவிர வெப்ப அலை காரணமாக இந்தியாவில் மட்டும் சுமார் 15,670 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2027-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலக அளவிலான பட்டியலில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 31,320 பேர் (31,400 வரை) வெப்ப அலைக்கு பலியாகக்கூடும் என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவில் 19,251 பேரும், சூடானில் 17,430 பேரும், பிரேசிலில் 13,271 பேரும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் 10,014 பேரும் பலியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, எல் நினோ வெப்ப அலையால் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் முதல் 10 நாடுகளின் கணிப்புப் பட்டியல் வருமாறு:
நைஜீரியா – 31,320
இந்தோனேசியா – 19,251
சூடான் – 17,430
இந்தியா – 15,670
பிரேசில் – 13,271
காங்கோ (DRC) – 10,014
நைஜர் – 9,900
சாட் – 7,953
பிலிப்பைன்ஸ் – 6,504
வியட்நாம் – 5,566
இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த கணிப்பீடு என்பது வெறும் பயமுறுத்தும் எண்கள் அல்ல; அரசாங்கங்கள் உடனடியாக விழித்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி. குடிநீர் வசதிகள், பொதுக் குளிர்விப்பு மையங்கள் திறந்தவெளியில் வேலை செய்வோருக்கான பணிநேரக் கட்டுப்பாடு மற்றும் அவசர மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.
