“இனி மொபைல் ரீசார்ஜ் மாதிரி தான் கரண்ட்!” – தமிழ்நாட்டில் வரப்போகும் புதிய ஸ்மார்ட் மீட்டர் சிஸ்டம்! சிபிஎம் கடும் எதிர்ப்பு!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் மின் பயன்பாட்டுக் கணக்கீட்டு முறையை நவீனமயமாக்கும் நோக்கில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் புதிய ஸ்மார்ட் மின் மீட்டர்களைப் பொருத்துவதற்காக, அதனை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை துல்லியமாகக் கணக்கிடவும், மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்ற ‘முன்பணம் செலுத்தும் முறை’யை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தனியார் சேவை நிறுவனங்களை நியமிக்க டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சென்னை பெருநகரப் பகுதி மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் மாநகராட்சிப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளிலும் இந்த நவீன ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

நுகர்வோர் மீட்டர்கள் தவிர, மின் விநியோக மின்மாற்றிகளில் மின் இழப்பைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவும் பிரத்யேக ஸ்மார்ட் மீட்டர்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி உள்ளிட்ட அனைத்து கூடுதல் விவகாரங்களையும் மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpdcl.org, www.tntenders.gov.in ஆகியவற்றில் விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களைப் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான ஒப்பந்த புள்ளிகளைக்கோரி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத்தகைய ஒப்பந்த புள்ளி அறிவிப்பினை வன்மையாக கண்டிப்பதோடு அதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

மின்சார சட்டத் திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு, ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்து வருகிறது. 2023- ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்த புள்ளிகளை கோரியபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. திமுக அரசும் அதனைத் திரும்ப பெற வேண்டி வந்தது. தற்போது தவெக அரசும் அதே பாதையில் பயணிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிற பணியினை துவக்கி உள்ளது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு இருந்தபோது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை அரசு நிறுவனமே தனது மூலதன செலவில் சோதனை ஓட்டம் மூலமாக துவக்கியது. ஆனால், தமிழ்நாட்டில் ஒப்பந்த புள்ளிகள் தனியாரிடமிருந்து வரவேற்கப்பட்டு செய்யப்படுவதால் இது தனியார் மயத்திற்கான நகர்வாகவே உள்ளது என்பது தெளிவு. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையானவையாக இருக்கும். முழுக்க முழுக்க மின்சார சேவையை சந்தையின் சூதாட்டத்திற்கு ஒப்படைப்பதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

தற்போது நடைமுறையில் உள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், சிறு குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், கைத்தறி நெசவு தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் கேள்விக் குறியாக்கப்படும். மின்சாரக் கட்டணம், விநியோகம் மீதான அரசின் கட்டுப்பாடும் கை கழுவப்படும்.

வணிக நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் உச்ச நேரக் கட்டணங்கள் வீடுகள் மீதும் திணிக்கப்படும். இது தவிர மாநில உரிமைகள், சமூக நீதி, வேலைவாய்ப்புகள் மீதும் கடுமையான பாதிப்புகளை தனியார் மயம் ஏற்படுத்தும். ஆகவே, அரசின் இத்தகைய முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கும், நவீன தாராளமய பொருளாதாரப் பாதையின் அழுத்தத்திற்கும் பணிகிற இம்முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author