செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அதைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி நபர்களை நம்பி ஏமாறும் சம்பவங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், தனிமையில் வாழ்ந்து வந்த 49 வயது தொழிலாளி ஒருவர், இணையத்தில் பார்த்த பெண்ணைக் காதலித்து, அவரை நேரில் சந்திப்பதற்காக சுமார் 2,000 கி.மீ. பயணம் செய்துள்ளார். ஆனால், தான் காதலித்ததாக நம்பிய பெண்ணே உண்மையில் இல்லை என்பது தெரியவந்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் பரவி, AI மூலம் உருவாக்கப்படும் போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் Daily Star வெளியிட்ட தகவலின்படி, பிரேசிலைச் சேர்ந்த எடிமார் ரோச்சா மார்டின்ஸ் என்ற அந்தத் தொழிலாளி, தனது தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் தவித்து வந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் சமூக வலைதளத்தில் ஜெசிகா ஒலிவியா என்ற பெயரில் பகிரப்பட்ட பெண்ணின் வீடியோக்களைப் பார்த்துள்ளார். பண்ணை வீடு மற்றும் கிராமப்புற வாழ்க்கை தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்து வந்த அந்தக் கணக்கிற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது பண்ணை வீட்டுக்கு வந்து தன்னுடன் வாழுமாறு அழைப்பு விடுப்பது போன்ற பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். இதனால், தனது வாழ்க்கையில் புதிய உறவு கிடைத்துவிட்டதாக எடிமார் நம்பியுள்ளார்.
அந்தப் பெண்ணை நேரில் சந்திக்க முடிவு செய்த எடிமார், வடக்கு பிரேசிலில் உள்ள இம்பெரட்ரிஸ் பகுதியிலிருந்து பெலோ ஹொரிசோன்டே நகருக்குப் புறப்பட்டுள்ளார். சுமார் 36 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து, ஏறத்தாழ 2,000 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளார். சந்தித்த பிறகு பயணச் செலவைத் திருப்பித் தருவதாகவும், பண உதவி செய்வதாகவும் அந்தப் பெண் கூறியதாக அவர் நம்பியுள்ளார். இதனால் தனது சேமிப்புப் பணத்தையும் சம்பளத்தையும் பயணத்திற்காகச் செலவழித்துள்ளார். ஆனால், அங்கு சென்றதும் ஜெசிகா ஒலிவியா என்ற பெண்ணை யாருக்கும் தெரியவில்லை. பின்னர், அவர் பார்த்த வீடியோக்களில் இருந்த பெண் உண்மையான நபர் அல்ல; AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி உருவம் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் கையில் உணவுக்கோ தங்குமிடத்திற்கோ போதிய பணமின்றி எடிமார் தவித்துள்ளார். அப்போது பெலோ ஹொரிசோன்டே நகரின் புலம்பெயர்ந்தோருக்கான உதவி சேவை அவருக்கு உணவும் தங்குமிடமும் வழங்கி உதவியதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான ஆலோசனைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. தனிமை காரணமாக இணையத்தில் உருவாகும் உறவுகளை முழுமையாக நம்பிவிடுவது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சமூக வலைதளங்களில் காணப்படும் அழகான முகங்கள், வீடியோக்கள் மற்றும் காதல் வாக்குறுதிகள் உண்மையான நபருடையவைதானா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.
