
பாகிஸ்தான் ராணுவமும் அந்நாட்டின் உளவு அமைப்புகளும் சொந்த நாட்டிலேயே பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி, அவற்றுக்கு நிதியுதவி அளித்து பயிற்சியும் அளித்து வருகின்றன என்று சர்வதேச நீதிமன்றத்தில் பஷ்டூன் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மன்சூர் பஷ்டீன் பரபரப்பான சாட்சியமளித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய மன்சூர் பஷ்டீன், கடந்த 23 ஆண்டுகளாக பஷ்டூன் இன மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளால் தொடர் வன்முறையையும் ரத்தக் களறியையும் சந்தித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். கைபர் பக்துன்க்வா பகுதியில் இயற்கை வளங்கள் நிறைந்த நிலங்களைக் கைப்பற்றுவதற்காகவும், உள்ளூர் மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்காகவும் பாகிஸ்தான் ராணுவமே பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது என்று அவர் அம்பலப்படுத்தினார்.
மேலும் பேசிய அவர், “கடந்த 22 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களால் சுமார் 76,000 பஷ்டூன் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 6,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ராணுவ நடவடிக்கைகளின் போது 2.5 லட்சம் வீடுகளும், 35,000 கடைகளும் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளூர் பொருளாதாரம் முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்” என புள்ளிவிவரங்களுடன் அடுக்கினார்.
மன்சூர் பஷ்டீன் சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியபோது, கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தானின் தூதர் ஆசிஃப் துர்ரானி மற்றும் அந்நாட்டின் பிரதிநிதிகள் பதிலளிக்க முடியாமல் அவமானத்துடன் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இந்தச் சம்பவம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
