தமிழகத்திற்கு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் மேலாண் இயக்குநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் வம்சாவளி தொழிலதிபர்களின் முதலீடுகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முதலீடுகளை ஈர்ப்பது ஆணையத்தின் முக்கியப் பணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
