செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், தற்போது தனது ‘மியூஸ்’ (Muse) ஏஐ உதவியாளருக்கு ‘மியூஸ் வாய்ஸ்’ (Muse Voice) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது கேள்விகளைத் தட்டச்சு செய்யாமல், நேரடியாகக் குரல் வழியாகவே ஏஐ உதவியாளருடன் நிகழ்நேரத்தில் உரையாட முடியும். இந்த வசதி மொபைல், இணையதளம் மற்றும் மேக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால், பயனர்கள் பேசும்போது மியூஸ் ஏஐ உதவியாளரின் அவதார் முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலம் பதிலளிக்கும். பயனர்கள் விரும்பினால் குரல் மட்டும் கேட்கும் வகையிலும், அவதாரைத் திரையில் காட்டும் வகையிலும் அல்லது முழுத்திரையில் நேருக்கு நேர் பேசுவது போன்ற அனுபவத்திலும் பயன்படுத்தலாம். மேலும், நூற்றுக்கணக்கான குரல் பாணிகளில் தங்களுக்குப் பிடித்தமானதைத் தேர்வு செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மியூஸ் வாய்ஸ் மூலம் பயனர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்பது மட்டுமின்றி, புதிய யோசனைகளை உருவாக்குவது, பயணங்களைத் திட்டமிடுவது, வேலைக்கான நேர்காணலுக்குத் தயாராவது போன்றவற்றிலும் உதவி பெறலாம். ஏஐ பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே பயனர்கள் இடையில் குறுக்கிட்டுப் பேசவும் முடியும். இதனால் வழக்கமான கேள்வி – பதில் முறையைத் தாண்டி, இயல்பான உரையாடல் அனுபவத்தைப் பெற முடியும் என மெட்டா தெரிவித்துள்ளது.
தற்போது இந்தப் புதிய வசதி அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு எப்போது விரிவுபடுத்தப்படும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், மெட்டாவின் ஏஐ கண்ணாடிகள் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ‘மியூஸ் சார்ம்’ சாதனத்திலும் இந்தக் குரல் உரையாடல் வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
