திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 15ஆம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், நவம்பர் 16ஆம் தேதி முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவித்துள்ளார்.
விழாவின் முதல் ஐந்து நாட்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் 6 லட்சம் பேரும், திருக்கல்யாணத்தின்போது 2 லட்சம் பேரும் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பக்தர்கள் தங்குவதற்காக 1,02,673 சதுர அடி பரப்பளவில் நிழற்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 300 தற்காலிக கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும், தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதுடன், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், ஒரு லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் எளிதாகக் காணும் வகையில் 26 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்படுகின்றன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நான்கு இலவச சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளுக்கு 400 தூய்மைப் பணியாளர்களும், பாதுகாப்புப் பணிகளுக்கு 789 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
வெளியூர் பக்தர்களின் பயண வசதிக்காக கூடுதல் பேருந்துகள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதேபோல், திருப்பரங்குன்றம் கோயிலிலும் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள சஷ்டி மண்டபம் இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
