விண்வெளியில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நாசாவின் ‘நீல் கெஹரல்ஸ் ஸ்விப்ட்’ தொலைநோக்கி தற்போது பூமியை நோக்கி இறங்கி வருகிறது. சுமார் 1.5 டன் எடையுள்ள இந்த விண்வெளி ஆய்வுக் கருவி, கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 22 ஆண்டுகளாகப் பிரபஞ்சத்தில் நிகழும் காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவா உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்து வந்தது. தற்போது அதன் சுற்றுப்பாதை உயரம் குறைந்து வருவதால், பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட தீவிர சூரியச் செயல்பாடுகள் பூமியின் மேல் வளிமண்டலத்தை விரிவடையச் செய்துள்ளன. இதனால் தொலைநோக்கி மீது வளிமண்டல இழுவிசை அதிகரித்து, அதன் சுற்றுப்பாதை உயரம் வேகமாகக் குறைந்துள்ளது. இதைத் தடுத்து தொலைநோக்கியை மீண்டும் உயரமான சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல நாசா முயற்சி மேற்கொண்டது. இதற்காக அனுப்பப்பட்ட ‘லிங்க்’ என்ற ரோபோ விண்கலத்தால் ஸ்விப்ட் தொலைநோக்கியை நெருங்கிப் பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த மீட்பு முயற்சி கைவிடப்பட்டது.
இந்தத் தொலைநோக்கி பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது அதன் பெரும்பாலான பகுதிகள் அதிக வெப்பத்தால் எரிந்து அழிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈயத்தைவிட அடர்த்தியான டங்ஸ்டன் உலோகத்தால் செய்யப்பட்ட சில பாகங்களும், கண்ணாடித் துண்டுகளும் வளிமண்டலத்தைக் கடந்து பூமியை வந்தடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவை எங்கு விழும் என்பது துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. எஞ்சிய பாகங்கள் கடலில் விழுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க விண்வெளிப் படையின் கணிப்பின்படி, தொலைநோக்கி நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையக்கூடும். அதன் சாத்தியமான விழும் பாதையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்தியாவிலும் சில பாகங்கள் விழ வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், இந்தியாவில் குறிப்பிட்ட எந்தப் பகுதியில் விழும் என்று இதுவரை கணிக்கப்படவில்லை; கடலில் விழுவதே அதிக சாத்தியம் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
