கர்நாடக மாநிலம் மைசூருவில், இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில், சுமார் 115 கோடி ரூபாய் மதிப்பில் இந்தக் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் அளவிலான சாய்வான LED குவிமாடத் திரையைக் கொண்ட இதில், சுமார் 6 ஆயிரத்து 150 LED பேனல்கள் மற்றும் 4 கோடியே 20 லட்சம் LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இதனை இன்று மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த விழாவில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோளரங்கத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
இதனிடையே, விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த அதிநவீன LED கோளரங்கம் நாட்டின் அறிவியல் தொடர்பான கல்வியில் ஒரு புதிய அத்தியாயம் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், அறிவுத் தேடலை வளர்க்கும் நிறுவனங்களை உருவாக்குவதில் மைசூரு நீண்டகாலப் பாரம்பரியம் கொண்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். இளைஞர்கள் அறிவியல் துறையில் முன்னேற ஆர்வமும், தேடல் மனப்பான்மையும் அவசியம் என அறிவுறுத்தினார்.
