13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர்.
மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-ஆம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட 2633 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் 1428 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என கண்டறியப்பட்டது. நேற்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். தற்போது மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக 500 பேரும், கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளில் 491 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திரிபுராவில் ஒரு தொகுதியில் இருந்து 14 பேர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் தொகுதியில் அதிகபட்சமாக 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அசாமில் 5 தொகுதிகளுக்கு 118 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனுக்கள் திரும்ப பெறும் அவகாசம் முடிந்ததற்கு பின்னர் 61 பேர் களத்தில் உள்ளனர்.
பீகாரில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்டத் தேர்தலுக்கு 146 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. களத்தில் 50 பேர் உள்ளனர்.
சத்தீஷ்கரில் 3 தொகுதிகளில் 41 பேர் களத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் 14 தொகுதிகளில் 247 பேரும், மத்தியப்பிரதேசத்தின் 7 தொகுதிகளில் 88 பேரும், மஹாராஷ்டிராவில் 8 தொகுதிகளில் 204 பேரும், ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் 152 பேரும், திரிபுராவில் ஒரு தொகுதியில் ஒன்பது பேரும் களம் காண்கின்றனர்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 500 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ததில் 204 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பின்னர் 194 பேர் போட்டியிடுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் 91 பேரும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் 47 பேரும் களத்தில் உள்ளனர்.
அவுட்டர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கிய 15 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 19-ம் தேதி முதல் கட்டமாகவும், 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்கள் மற்றும யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் 1625 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 1491 பேர், பெண் வேட்பாளர்கள் 134 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.