ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து, 28 சிக்ஸர்களுடன் புதிய உலக சாதனை படைத்த ஆட்டத்தை, இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா அசாதாரணமான அதிரடி ஆட்டம் எனப் பாராட்டியுள்ளார்.
250 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்தியா ஏ அணி, வெறும் 14.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து முதல் ஐந்து ஓவர்களிலேயே போட்டி முடிந்துவிட்டது போலத் தோன்றியதாகக் கூறிய திலக் வர்மா, வெறும் 5 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து அணி புதிய சாதனை படைத்ததையும் சுட்டிக்காட்டினார். வைபவ் எளிதாகச் சிக்ஸர்கள் அடிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்ததால், டிரஸ்ஸிங் ரூமில் எந்தப் பதற்றமும் இன்றி அனைவரும் “அடி, அடிங்க, அடிங்க” என உற்சாகமாகக் கத்தியதாக அவர் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார்.
பந்து பவுண்டரிக்குச் சென்றால் கூட யாரும் அதைக் கவனிக்காமல், “சிக்ஸ் அடிச்சிட்டாரா? சிக்ஸ் அடிச்சிட்டாரா?” என்றுதான் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், இது தான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று எனவும் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
28 பந்துகளில் அதிவேக லிஸ்ட்-ஏ சதம், 40 பந்துகளில் 150 ரன்கள் மற்றும் 52 பந்துகளில் அதிவேக இரட்டைச் சதம் எனப் பல சாதனைகளை வைபவ் முறியடித்ததோடு, முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திச் சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷத் கானின் பங்களிப்பையும் திலக் வர்மா பாராட்டியுள்ளார்.
