20ஆவது ஷாங்கரி-லா உரையாடலில் பங்கெடுத்த சீன அரசவை உறுப்பினரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான லீ ஷாங்ஃபூ ஜுன் 4ஆம் நாள் “பாதுகாப்பு பற்றிய சீனாவின் புதிய முன்மொழிவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உலகப் பாதுகாப்பு முன்மொழிவை முன்வைத்து, சர்வதேசப் பாதுகாப்புச் சவாலைச் சமாளிப்பதற்குச் சீனாவின் தனிச்சிறப்புமிக்க சிந்தனையை வழங்கியுள்ளார். மேலும், சீன நவீனமயமாக்கத்தின் நனவாக்கம், பொது வளர்ச்சிக்கு வலிமைமிக்க இயக்காற்றலை ஊட்டி, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும் உலக மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
சீன-அமெரிக்க உறவு பற்றி அவர் கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது ஆகிய 3 கோட்பாடுகள், இரு நாட்டுறவை வளர்ப்பதற்குரிய சரியான வழிமுறையாகும் என்று தெரிவித்தார்.
மேலும், தைவான் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பது குறித்துப் பேசிய அவர், தைவான் பிரச்சினை சீனாவின் உள்விவகாரமாகும் எனக் குறிப்பிட்டதோடு, எந்த வெளிநாட்டுச் சக்தியும் இதில் தலையிடக்கூடாது என்றார். மேலும், இப்பிரச்சினையில், நாட்டு இறையாண்மையையும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீனப் படைகள் உறுதியாகப் பேணிக்காக்கும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து அவர் மேலும் கூறியதாவது, பிரதேச நாடுகளின் கூட்டு முயற்சியுடன் தென் சீனக் கடலின் சூழ்நிலை நிதானமாக உள்ளது. பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு நாளுக்கு நாள் ஆழமாகி வருகிறது. ஆனால் வெளிப்புறத்திலுள்ள சில நாடுகள் தங்கள் நலன்களுக்காக இப்பிரதேசத்தின் ஒழுங்கை சீர்குலைக்க முயன்று வருகின்றன என்றார்.
தவிரவும், ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு, திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் கொண்ட ஒத்துழைப்பு தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு நாடுகளுடன் கையோடு கை கோர்த்து, நவீனமயமாக்கத்தை நனவாக்கி, உலக நிலைப்புத் தன்மை மற்றும் செழுமைக்கு புதிய வாய்ப்புகளை வழங்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.