“அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்”- விஜய்க்கு கூட்டணி கட்சிகள் அட்வைஸ்

Estimated read time 0 min read

த.வெ.க. ஆட்சி அமைந்து ஆறு மாதங்களை கடந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில், காவிரி பிரச்சினை, திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டாலும், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சட்டம் ஒழுங்கு குறித்தே அதிகம் பேசியுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், வி.சி.க., ஐ.யூ.எம்.எல்., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தற்போது த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் கூட்டணியில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. காங்கிரஸ், வி.சி.க., ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டே ஆண்டுகளில் கட்சியை தொடங்கி, 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து வாக்களித்தனர். ஆனால் ஆட்சி அமைந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான புகார்கள் என அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக ஒரு பக்கம் பேசப்பட்டாலும், கள நிலவரம் வேறு மாதிரி இருப்பதாக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர்.

இந்த சூழலில் தான் முதலமைச்சர் விஜய், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்தித்தார். ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 15 நிமிடங்கள் ஒதுக்கி பேசினார். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள், தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், கடந்த தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வருவதற்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே முக்கிய காரணமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை உயர்த்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காவிரி விவகாரத்தில் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதைவிட முக்கியமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் வாக்களித்த மக்களே எதிராக திரும்புவார்கள் என்றும் நேரடியாக எச்சரித்தனர். பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்தால் தான் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். திருப்பரங்குன்றத்தில் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துகள் அனைத்தையும் முதலமைச்சர் விஜய் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author