கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்தன.
இதனிடையே, நவம்பர் 23 ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இச்சம்பவம் குறித்து நேரடியாக புகார் அளித்தார். அந்த புகாரில், மாவட்ட ஆட்சியரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும் (Inappropriate advances), தேவையற்ற மற்றும் ஆபாச குறுஞ்செய்திகளை (Unwarranted messages) அனுப்பியதாகவும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (Tamil Nadu Prohibition of Harassment of Women Act) கீழ் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை மற்றும் விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
