நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் ரொக்கம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பாஸ்டேக் வசதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதனால் சுங்கச்சாவடியில் கட்டண வசூலிக்க செயற்கைக்கோள் அடிப்படையிலான குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் எனப்படும் ஜி.என்.எஸ்.எஸ் முறை நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 2008 ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வாகனங்களில் செயற்கைக்கோள் இணைப்புகளான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் ஓபியூ கருவி வாகனத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.
இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம் சுங்கச் சாலையில் பயணிக்கும் போது முதல் 20 கிலோமீட்டர் இலவசமாக செல்லலாம். அதன் பிறகு அந்த வாகனம் பயணிக்கும் தூரம் செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு பாஸ்டேக் போலவே வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.
இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு மெது மெதுவாக சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். முதல் கட்டமாக அதிவிரைவு சாலைகள் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இது அமலுக்கு வரவுள்ளது.