தமிழகத்தில் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்கள் இம்முறை அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாகவே தென்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூன் முதல் செப்டம்பர் 16 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 359.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இதே காலகட்டத்தில் பெய்யும் சராசரி மழை அளவான 269.3 மில்லி மீட்டரை விட 34% அதிகம்.
இவ்வளவு அதிக மழைப்பொழிவு, நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்வதற்கும், வேளாண்மைக்கு உதவுவதற்கும் வழிவகுத்தாலும், அதிக மழையால் ஏற்படும் இடப்பெயர்வு, விளைநிலங்கள் பாதிப்பு போன்ற பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.