கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார், அதைப்போல, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
14.71 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வயநாடு தொகுதியில் இன்று ( நவம்பர் 13) காலையில் வாக்குப்பதிவு தொடங்கியது. 1,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு மக்களின் பாதுகாப்புக்காக வாக்குச்சாவடிகளுக்குப் பக்கத்தில் காவல் அதிகாரிகளும் இருந்தனர்.
காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில் தற்போது முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைந்தாலும், பல சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விதிமுறைகளின் படி, வாக்காளர்கள் மாலை 6 மணி வரை வருபவர்கள் வாக்களிக்கலாம். எனவே, பலரும் மெதுவாகச் சென்று தங்களுடைய வாக்குகளை அளித்தனர்.
இந்நிலையில், மொத்தமாக இதுவரை பதிவான வாக்குப் பதிவுகள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, சேலக்கரையில் இதுவரை 71.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாட்டிலும் 60.79 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட இம்முறை வயநாட்டில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
ஏனென்றால், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 80% மக்கள் வாக்கு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு (2024)-ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 74.74% வாக்குகள் பதிவானது. இதனையடுத்து, இப்போது (2024) நவம்பரில் நடைபெற்றுள்ள இந்த தேர்தலில் மொத்தமாக 60.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று நடைபெற்றுள்ள இந்த தேர்தலுக்கான முடிவுகள் நவம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.