அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருப்பார் என்றார்.
அதன் பிறகு ஓபிஎஸ் மீது தற்போதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தேனி மாவட்டத்திலிருந்து முதல் ஆளாக அவரை அழைப்பதாகவும் அவர் கண்டிப்பாக எங்களது கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஓ.பி.எஸ். அவர்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர். அவர் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால், சசிகலா தலைமையில் மீண்டும் முதல்வராக வந்திருப்பார்.
தற்போது அவருக்குச் சில தர்மசங்கடங்கள் உள்ளன. இருப்பினும், வரும் தேர்தலில் அவர் எங்களது கூட்டணியில் இணைவார் என நம்புகிறேன்.
ஜெயலலிதா இருந்த இடத்தில் இப்போது பிரதமர் மோடியை நாங்கள் பார்க்கிறோம். அவர் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலே தமிழகத்தின் உண்மையான விடியலாக இருக்கும். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து, அவர்களை அமைச்சர்களாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக நான் யாருக்கும் அழுத்தம் தரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நடிகர் விஜய் பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்தது குறித்த கேள்விக்கு முதலில் நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எனவும் நாங்க வெகுண்டு எழுந்தால் அது தப்பா போய்விடும் எனவும் தேர்தலில் ஜெயித்து விட்டு அப்புறம் பேசுங்கள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
