ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று,அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறார்.
மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். ராமேஸ்வரம் கோயிலில் அக்னி தீர்த்தத்திலும், 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இன்று இரவு பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் தங்குகிறார். இதையடுத்து, நாளை அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயிலுக்கு செல்கிறார்.