பத்மபூஷன் விருது எனக்கு அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அனைவருக்கும் நன்றி விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பின் எனக் கூறிவிட்டு நடிகர் அஜித் புறப்பட்டு சென்றார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்டில் கலை,சமூக சேவை,அறிவியல், பொறியியல்,தொழில் மருத்துவம் இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றும் நபர்களை கௌரவிக்கும் விதமாக ஒன்றிய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் பத்மபூஷன் பத்மஸ்ரீ என மூன்று வகையான விருதுகளை 139 பேருக்கு அறிவிக்கப்பட்டு நேற்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இதில் திரை துறையில் சிறந்து விளங்கியதற்காகவும்,கார் பந்தயத்திலும் சிறந்து விளங்கியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் அஜித்குமார் டெல்லியில் இருந்து இன்று குடும்பத்துடன் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார், அப்போது நடிகர் அஜித்குமார் மட்டும் முதலில் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.
அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அஜித்குமார், “எனக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது, எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசுவேன்” என்றார். பின்னர் தொடர்ந்து ரசிகர்களும் செய்தியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டு சென்றதால் ஒரு நிமிடம் கோபமடைந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்,
இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி மகள் மற்றும் மகனுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷாலினி, “நடிகர் அஜித்குமார் பத்மபூஷன் விருது பெற்றது ரொம்ப பெருமையாக உள்ளது. குடியரசுத் தலைவர் பத்மபூஷன் விருது வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அனைவருக்கும் நன்றிகள். டெல்லி ராஷ்ட்ரியபவனில் பத்மபூஷன் விருது வழங்கியது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது” என்றார்.