கேள்வி:- பா.ஜனதா மற்றும் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. எழுப்புகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்:- தமிழ்நாட்டு மக்கள், அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எங்களது இதயத்தில் வாழ்கின்றன. தமிழ்நாட்டின் மரபு மீது நாடு முழுவதும் பெருமை கொண்டு இருக்கிறது.
பிரதமர் மோடி அரசின் கீழ் தமிழ் கலாசாரத்தை முன்னெடுத்த பல நடவடிக்கைகள் உள்ளன. 2023-ம் ஆண்டு மே மாதத்தில், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் வரலாற்று செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
இது தமிழ் மரபுக்கு உரிய மரியாதையாகும். காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் தமிழகத்துக்கும் பாரதத்தின் அடையாளமான காசிக்கும் இடையேயான ஆன்மிக, கலாச்சார உறவை மீண்டும் வலுப்படுத்தும் எண்ணத்துடன் நடந்தது.
2014 முதல் 2025-ம் ஆண்டு வரை தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் சிலம்பக்கலை ‘கேலோ இந்தியா’வில் சேர்க்கப்பட்டது. ரூ.24 கோடியில் சென்னையில் தமிழின் இலக்கிய வளர்ச்சிக்காக புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவினார்.
திருக்குறளை 190 மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தைத் தொடங்கினார், அதில் 63 மொழிபெயர்ப்புகள் முடிந்துள்ளன.
ஐ.நா. மன்றத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ் வரியை குறிப்பிடும் அளவுக்கு அவர் தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.
சுப்பிரமணிய பாரதியின் முழுப்படைப்புகளும் வெளியிடப்பட்டு, அவருக்கு உரிய மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ள போகிறீர்கள்?
பதில்: தி.மு.க. அரசின் தோல்விகளையும், பிரதமர் மோடியின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வோம். இந்த இரண்டும், இந்தத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
நாடு முழுவதும் நாங்கள் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளோம்.
அனைத்தும் தேர்தல்களை கடந்து வென்று உருவானவை தான். தமிழ்நாட்டிலும் அதேபோல் தேர்தலுக்குச் செல்வோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக அரசு அமைக்கும்.
கேள்வி:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடி நாகரீகத்தை அளிக்க மத்திய அரசு முயல்கிறது என்று குற்றம் சுமத்துகிறார். தொல்லியல் நிபுணர் ராமகிருஷ்ணனின் அறிக்கையும் நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து இருக்கிறாரே?
பதில்: பாருங்கள், தொன்மையான நாகரீகம் நாட்டில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அது இந்தியா முழுவதற்கும் பெருமையான விஷயம். அது தமிழ்நாட்டிலும் இருந்தாலும் கூட, இந்தியா முழுவதும் நம் அனைவருக்கும் பெருமைதான்.
ஆனால், உலகம் இதை ஏற்றுக்கொள்வது சர்வதேச தரமான ஆதாரங்களின் அடிப்படையில் தான். எனவே, தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன். எல்லோரும் பெருமைப்படுகிறார்கள், யாருக்கும் அதில் பிரச்சனை இல்லை.
கேள்வி:- தேர்தல் அரசியலுக்கு எது முக்கியம். கூட்டணியா? கொள்கையா?
பதில்: சில நேரங்களில் மக்கள் முழுமையான பெரும்பான்மை அளிக்காதபோது, கூட்டணிக்கு முக்கியத்துவம் தர வேண்டி இருக்கும்.
ஆனால், அது அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. ஏனெனில் இறுதியாக, ஜனநாயகத்தில் தீர்மானம் எடுப்பது மக்கள்தான்.
கேள்வி: இந்த கால கட்டத்தில் இணையதள குற்றங்கள் அதிகரிக்கின்றன. உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. எனவே சைபர் கிரைம் என்ற இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் அரசு என்ன செய்திருக்கிறது?
பதில்:- மோடி அரசு 1930 என்ற உதவி எண்ணை உருவாக்கியுள்ளது.
இதற்கு தினமும் சுமார் 60 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இந்த நடவடிக்கையில் 419 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்துள்ளன.
இதன் மூலம் ரூ.4,275 கோடி தொகை 14.47 லட்சம் பேரிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் சைபர் குற்றங்களுக்கு எதிரான இணையம் தொடங்கப்பட்டது. இதுவரை 65 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
12 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 கோடிக்கும் மேற்பட்ட முறை அந்த இணையம் மக்களால் அணுகப்பட்டுள்ளது.
இந்திய சைபர் குற்றத் தடுப்பு ஒத்துழைப்பு மையம் தொடங்கப்பட்டு, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சைபர் தடயவியல் பயிற்சி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சி.எப்.எம்.சி. என்ற மையம், ஏமாற்றப்பட்டோருக்குப் பணத்தை மீட்டுத் தர உதவுகிறது.
இந்த அமைப்பில் புகாரை பதிவு செய்ததும், மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கி நிறுத்தி வைத்து உரிய சரிபார்த்தலுக்குப் பிறகு அதை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குகிறது.
– நன்றி : தினத்தந்தி