செம அறிவிப்பு..! இனி ஜிமெயில் ஐடியை மாற்றலாம்..! ஆனால் ஒரு கண்டிஷன்..!

Estimated read time 1 min read

சிறு வயதில் விளையாட்டுத்தனமாக உருவாக்கிய ஜிமெயில் ஐடியை (Gmail ID), வேலை மற்றும் தொழில்முறைத் தேவைகளுக்காக மாற்ற முடியாமல் தவிப்பவர்களுக்குக் கூகுள் ஒரு சிறந்த தீர்வை வழங்கியுள்ளது. தற்போது பயனர்கள் தங்கள் பழைய ஜிமெயில் யூசர்நேமை (User Name) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியைக் கூகுள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனர்கள் @gmail.com என முடிவடையும் தங்களின் தற்போதைய மெயில் முகவரியை மாற்றிவிட்டு, அதே கணக்கில் புதிய பெயரில் முகவரியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மாற்றத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், மெயில் ஐடியை மாற்றினாலும் உங்கள் கூகுள் கணக்கில் உள்ள கூகுள் டிரைவ் (Drive), போட்டோஸ் (Photos), யூடியூப் (YouTube) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) போன்ற சேவைகளில் உள்ள எந்தத் தரவுகளும் (Data) அழியாது. நீங்கள் வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைத்தும் அப்படியே தொடரும். உங்களின் பழைய மெயில் முகவரி, பாதுகாப்புத் தேவைக்காக ‘ரிகவரி மெயில்’ (Recovery Email) ஆகத் தானாகவே சேமிக்கப்படும்.

பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கு அமைப்புகளில் (Settings) ‘தனிப்பட்ட தகவல்’ (Personal Info) → ‘Email’ என்ற பகுதிக்குச் சென்று இந்த வசதி தங்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். ஒருமுறை யூசர்நேமை மாற்றிய பிறகு, பழைய மெயில் ஐடி மற்றும் புதிய மெயில் ஐடி என இரண்டிற்கு வரும் செய்திகளும் ஒரே இன்பாக்ஸிலேயே சேமிக்கப்படும். மேலும், உங்கள் கணக்கில் லாகின் செய்ய இந்த இரண்டு மெயில் முகவரிகளையும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இருப்பினும், இந்த வசதியில் சில நிபந்தனைகளும் உள்ளன. ஒருமுறை மெயில் ஐடியை மாற்றிய பிறகு, மீண்டும் மாற்ற விரும்பினால் 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல, ஒரு கூகுள் கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே யூசர்நேம் மாற்ற அனுமதிக்கப்படும். நீங்கள் கைவிட்ட பழைய ஜிமெயில் ஐடியைப் பயன்படுத்தி வேறு யாரும் புதிய கணக்கைத் தொடங்க முடியாது என்பதால் உங்கள் பழைய ஐடியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

1

Please follow and like us:

You May Also Like

More From Author