சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 29, 2025) சற்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,020-க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று எதிர்பார்க்கப்பட்ட உயர்வுக்கு பதிலாக தணிந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொடும் என்று கணிக்கப்பட்டது போலவே அது நிகழ்ந்தது. உலக தங்க கவுன்சில் கணிப்பின்படி 2026 இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் கடந்த வாரம் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. வார தொடக்கத்தில் ரூ.1,560-க்கு தொடங்கிய சவரன் விலை வார இறுதியில் ரூ.1,04,800-ஐ எட்டியது.
சர்வதேச சந்தை போக்கு, அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றங்கள், முதலீட்டு தேவை ஆகியவை தங்கம் விலையின் ஏற்ற இறக்கத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தொடர் உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினரையும் திருமண விசேஷங்களுக்காக நகை தயாரிக்கும் குடும்பங்களையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. இன்றைய குறைவு அவர்களுக்கு சிறிது நிம்மதி அளித்துள்ளது.
தங்கத்துக்கு இணையாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.281-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை தேவை மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களே இந்த குறைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.இந்த ஏற்ற இறக்கம் தங்கம், வெள்ளி முதலீட்டாளர்களையும் நகை வாங்குபவர்களையும் கவனத்துடன் இருக்க வைத்துள்ளது. சந்தை ஆய்வாளர்கள் அடுத்த சில நாட்களில் விலை மீண்டும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் இந்த குறைவு பலருக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
