சென்னை : கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்நிலை குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் கூட்டணி நிலைப்பாடு, விஜய்யின் பிரபலம் மற்றும் பொங்கலுக்குப் பிறகு நிகழவுள்ள மாற்றங்கள் குறித்து பேசினார். “மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அண்டை நாடான மலேசியாவில் ஒரு இந்திய நடிகருக்கு ‘ரோட் ஷோ’ நடத்த அனுமதி வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. 1972-ல் எம்.ஜி.ஆருக்கும், 1988-ல் ஜெயலலிதாவிற்கும் இருந்த அதே மக்கள் அலையை இன்று விஜயிடம் காண்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை விமர்சித்தது குறித்து பதிலளித்த செங்கோட்டையன், “இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்த சீமான் அங்கே உணவருந்திவிட்டு பரிசு பொருட்கள் வாங்கி வந்த காலம் இருக்கிறது. அதை மறந்துவிடக்கூடாது” என்று பதிலடி கொடுத்தார்.
சீமானின் கொள்கை உறுதியை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கருத்து அமைந்தது.கூட்டணி குறித்து பேசிய செங்கோட்டையன், “விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே எங்கள் கூட்டணியில் இணைய முடியும். மக்களின் உணர்வை பிரதிபலிப்பவர் தலைவர் விஜய். எல்லோரும் வாழ வேண்டும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்பதே தவெகவின் நோக்கம்” என்று தெளிவுபடுத்தினார். காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் இணைய விரும்புவதாகக் கூறப்படும் கருத்துக்கள் இன்னும் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும் அப்படி வந்தால் பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் என்று கூறிய செங்கோட்டையன், “ஜனவரி முதல் வாரத்திற்குள் பல முக்கிய அரசியல் தலைவர்கள் தவெகவில் இணைய உள்ளனர். தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழப் போவதை நீங்கள் அப்போது காண்பீர்கள்” என்று ரகசியம் உடைத்தார்.செங்கோட்டையனின் இந்தத் தொடர் அதிரடிகள் கொங்கு மண்டல அரசியலில் தவெகவுக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தற்போது தவெகவின் வளர்ச்சிப் பணிகளில் புயல் வேகத்தில் ஈடுபட்டு வரும் அவரது கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 தேர்தல் களத்தில் தவெகவின் நகர்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
