குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Estimated read time 1 min read

குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.07/2025, நாள் 25.04.2025-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) – க்கான தேர்வுகள் கடந்த 12.07.2025-இல் மாநிலம் முழுவதிலும் 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதில் 13.89,238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததில் 11,48,019 விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதினர். தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. இதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 12.07.2025 மு.ப. அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இன்று செய்திகள் வந்துள்ளன, சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை. OMR விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) வைத்து சீலிடப்பட்டு அவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும் வரை 24×7 முறையில் நேர லையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு CCTV Camera மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. எந்த ஒரு விடைத்தாளும் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை.

tnpsc3

பத்திரிகைச் செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப்பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவையாகும். இவை தேர்வில் பயன்பட்டது போக மீதமிருந்த வினாத்தாள்கள் என்பதால், வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும். தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் இவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து தேர்வாணையம் ஏற்கனவே விரிவான நடைமுறையினை வெளியிட்டு பின்பற்றி வருகிறது. எனவே, 12.07.2025 மு.ப. அன்று நடந்து முடிந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் பத்திரிகை மற்றும் இதர ஊடக செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும். வினாத்தாளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் 21.07.2025 மாலை 05.00 மணியளவில் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் தெரிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு முன்னரே தேர்வாணையத்தால் தெரிவித்தபடி இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author