உலகின் பெயரே இல்லாத ஒரே ரயில் நிலையம்!

Estimated read time 1 min read
உலகில் பெயரே இல்லாத ஒரே ரயில் நிலையம் இந்தியாவில்தான் இருக்கிறது. இங்குள்ள 7,325 ரயில் நிலையங்களில் அந்த ஒரு நிலையத்தில் மட்டும் பெயர்ப் பலகை வெறும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரு எழுத்துகூட இருக்காது!

எங்கே, ஏன்?

மேற்குவங்க மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் பாங்குரா – மஸாகிராம் ஆகிய ஊர்களுக்கு இடையே ராய் நகர் என்ற ரயில் நிலையம் இருந்தது.

இந்தப் பகுதியில், மீட்டர் கேஜ் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது, பழைய ரயில் நிலையத்தை இடித்துவிட்டு, புதிதாக ரயில் நிலையம் அமைத்தார்கள். ஏற்கெனவே இருந்த பெயரான ‘ராய் நகர்’ என்பதையே பலகைகளில் வைத்தார்கள்.

இங்குதான் பிரச்சினை வெடித்தது.

புதிய நிலையம் கட்டினார்கள் அல்லவா… அதைக் கொஞ்சம் தள்ளி கட்டிவிட்டனர். அது ராய் நகர் என்கிற ஊருக்கு பதிலாக, பக்கத்து ஊரான ரெய்னா என்ற ஊரின் எல்லைக்குள் வந்துவிட்டது.

உடனே அந்த ஊர் மக்கள், “இப்போது எங்கள் ஊரில் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது.

ஆகவே, இனியும் ராய் நகர் என்கிற பெயர் இருக்கக் கூடாது. எங்கள் ஊரான ரெய்னா என்பதையே வைக்கவேண்டும்” என போர்க்கொடி தூக்கினர்.

ரயில்வே நிர்வாகமோ, “ஏற்கெனவே இருந்த ரயில் நிலையம்தானே.. கொஞ்சம் தள்ளி புதிதாக அமைத்து இருக்கிறோம்.

பெயரை மாற்றினால் அதற்கான ஆவணங்கள் எல்லாவற்றிலும் பெயர் மாற்ற வேண்டி வரும். குழப்பங்கள் ஏற்படும். ஆகவே ராய் நகர் என்கிற பெயரே தொடரும்” என்று மறுத்தது.

இதனால் ஆத்திரமடைந்தனர் ரெய்னா மக்கள். 2008-ல் அகலப் பாதை பணிகள் முடிந்து ரயில் நிலையம் திறக்கப்பட இருந்த நேரத்தில் ரெய்னா பகுதி மக்கள் ரயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.

பெயர்ப் பலகைகளில் இருந்த ராய் நகர் என்ற பெயரை கரி பூசி அழித்தனர். ரயில் நிலையத்தைத் தாக்கவும் செய்தனர்.

ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்தன. அந்த பாதையில் வந்த ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தவிர இரண்டு கிராமங்களுக்கு இடையிலான கௌரவப் பிரச்சினையாக மாறியதால், இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்பட்டன.

அந்த பகுதியே ரணகளமானது. கலவரம் மூண்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறப்புக் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பயங்கர பதட்டம்.

சூழலைப் பார்த்த மாவட்ட நிர்வாகமும் ரயில்வேயும் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தன.

“சரி, இப்போதைக்கு எந்தப் பெயரும் வேண்டாம்” என்று, பெயர்ப் பலகைகளில் இருந்த பெயர்களை முழுமையாக நீக்கினர்.
வெறும் மஞ்சள் நிற போர்டுதான்!

அப்போது சமூக ஆர்வலர்கள், “இதே போல ஜார்க்கண்ட் மாநிலத்தில், பட்கி மற்றும் சம்பி ஆகிய இரு ஊர் மக்களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது.

ரயில்வே நிர்வாகம் இரண்டு ஊரின் பெயர்களையும் இணைத்து பெயர் வைத்துவிட்டது. அதனால் பிரச்சினை தீர்ந்தது.

அதுபோல இங்கும் ராய் நகர் – ரெய்னா என இரு ஊர்களின் பெயரையும் வைக்கலாம்” என்று யோசனை கூறினர்.

இதை இரண்டு ஊர் மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

“அப்படா பிரச்சினை முடிந்தது!” என்று நினைக்கிறீர்களா..

அதுதான் இல்லை.. இரண்டு ஊர் மக்களும், “எங்கள் ஊர் பெயர்தான் முதலில் வரவேண்டும்” என்று முரண்டு பிடிக்க… பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இதற்கிடையே, விவகாரம் கொல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு சென்றது.

“இது, இரு ஊர் மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினை. ஆகவே மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து பேசி முடிவெடுக்கட்டும்” என்று சொல்லிவிட்டது நீதிமன்றம்.

எந்த அரசு நிர்வாகமாக இருந்தாலும், அதன் உச்சத்தில் அரசியல்வாதிகள்தானே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு, இரண்டு ஊர்களின் வாக்குகளும் வேண்டுமே. ஆகவே, இந்த ஊரில் இவர்களுக்கு ஆதரவாகவும், அந்த ஊரில் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசுகிறார்கள்.

இதனால் பிரச்சினை நீடிக்கிறது!

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.

“இந்த ஊருக்குச் செல்பவர்கள், எந்த பெயரைச் சொல்லி டிக்கெட் எடுப்பார்கள்”

இங்குதான் ரயில்வே நிர்வாகம் ஒரு ட்விஸ்ட் வைத்தது. ஏற்கெனவே இருக்கும் ராய் நகர் என்ற பெயரையும், RNGR என்ற குறியீட்டையும் தொடர்கிறது.

டைம்டேபிள், டிக்கெட், ஆவணங்கள் எல்லாவற்றிலும் இந்தப் பெயர்தான் இருக்கிறது.

ஆகவே, ராய்நகர் என சொல்லி இந்த ஊருக்கு டிக்கெட் எடுக்கலாம்.

ஆனாலும், “ஆவணங்களில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ரயில் நிலைய அறிவிப்பு பலகைகளில் அடுத்த ஊர் பெயர் இருக்கக் கூடாது” என்பதில் இரு ஊர்க்காரர்களும் வீம்பாக இருக்கிறார்கள்! ஈகோ!

இதிலும் ஒரு பாசிடிவான விசயம் நடந்திருக்கிறது.

“உலகில் பெயரே இல்லாத ஒரே ரயில் நிலையம்” என்று கேள்விப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

பெயர் இல்லாத ரயில்வே போர்டு அருகே நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

உள்ளூர்வாசிகள், “ரொம்ப சின்ன கிராமங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் இப்படி சுற்றுலாவாசிகள் வருவதால் எங்கள் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது” என்கிறார்கள்.

ஒரே இன, மொழி, மாநில மக்கள்… ஏன்.. ஒரே மாவட்டம், ஒரே நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதி மக்கள் தான்… ஆனால், “ஊர்ப் பெருமை” என்கிற ஈகோ!

இதனால் கடந்த 17 ஆண்டுகளாக, பெயரே இல்லாமல் ரயில் நிலையம் இயங்கி வருகிறது!

Please follow and like us:

You May Also Like

More From Author