10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களாக பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026 பொதுத் தேர்வுகள் 12 ம் வகுப்பிற்கு, மார்ச் 2 ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் 3,412 தேர்வு மையங்களிலும் பள்ளி மாணவர்கள் 7,99,692 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். அதேபோல் கடந்த ஆண்டுகளில் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்களுக்கு (Arrear) மார்ச் 3ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 2,615 தேர்வு மையங்களில் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.
பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ந் தேதி வரை 4,219 தேர்வு மையங்களில் பள்ளி மாணாக்கர்கள் 8,82,806 மற்றும் தனித்தேர்வர்கள் 26,196 என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.
இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000- க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900- க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், நடப்பாண்டில் முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் கண் பார்வையற்றோர், காது கோளாத மற்றும் வாய்பேச இயலாதாேர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்று தேர்வு எழுத இயலாதோர் , மற்றும் எதிர்பாராத விபத்தினால் கை முறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு உடையோர், நரம்பியல் குறைபாடு உடையோர் ஆகியோருக்கு ஒரு மொழிப்பாடத்தில் விலக்கு , தேர்வு எழுதுவதற்கு கூடுதல் கால நேரம் வழங்குவதுடன், தேவைப்படும் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்படுவர்.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா 2026 ம் ஆண்டு பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக கல்லூரியில் 2 ஆண்டு படிக்கும் மாணவர்களையோ, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களையோ நியமிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும், தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் (Diploma in Elementary Education), ஆசிரியர் கல்வி பட்டச் சான்று (B.Ed..) பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி முதல்வர்களைத் தொடர்பு கொண்டு சொல்வதை எழுதுபவர் பணிக்கு தன்னார்வலர்களாக சொல்வதை எழுதலாம் என கூறியிருந்தார். சொல்வதை எழுதுபவர்களாக 12 ம் வகுப்பில் 7465 பேரும், 11 ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 186 பேரும், 10 ம் வகுப்பிற்கு 12,292 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு மற்றும்12 ம் பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
