நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அடிப்படை வசதிகளுக்குக்கூட பணம் வசூலிக்கப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த வாரம், தனது மனைவியின் பிரசவத்திற்காக வந்த நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. பிறந்த குழந்தையைத் தந்தையிடம் காட்ட வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் கட்டாயப்படுத்தியதாக அந்த நபர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் விரிவான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நோயாளிகளை அழைத்துச் செல்லும் வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர்களைத் தள்ளுவதற்குக்கூட 100 முதல் 200 ரூபாய் வரை ஊழியர்கள் வெளிப்படையாக பேரம் பேசுவது அம்பலமாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளிடம் மனிதாபிமானமின்றி லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
