மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இன்று 16-வது நாளை எட்டியுள்ள இந்தப் போரினால் உலக நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளன.
போர் தொடங்கிய இரண்டாம் நாளிலேயே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச அதிகாரமிக்கத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொஜ்தபா பொறுப்பேற்றவுடன் அவருக்கு ரஷ்யா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் குறித்த ரகசியத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மறுபுறம், சீனா ஈரானுக்கு 2 லட்சம் டாலர் நிதியுதவி அறிவித்துள்ளதுடன், தேவைக்கேற்ப அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளும் ஈரானின் பக்கம் நின்று அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மத்திய கிழக்கில் அமெரிக்கா போரில் கவனம் செலுத்தி வருவதைப் பயன்படுத்திக் கொண்டு, தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா திடீரென தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.
சீனாவின் இந்த அச்சுறுத்தலைத் தைவான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்க வேண்டியிருக்கும். ஏற்கனவே ஈரான் உடனான போரில் சிக்கியுள்ள அமெரிக்காவிற்கு, ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் போரைச் சந்திப்பது பெரும் சவாலாக அமையும். அமெரிக்காவை நிலைகுலையச் செய்ய சீனா இந்த வியூகத்தை வகுத்துள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் உலகமே மற்றொரு பெரும் போரின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பதால் சர்வதேசச் சந்தையிலும், அரசியல் சூழலிலும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
