தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு பிஜி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
கேஸ் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, 4 பேருக்கான ஏசி இல்லாத அறைக்கு ₹6,500 என்றும், ஏசி அறைக்கு ₹7,500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 3 பேருக்கான ஏசி இல்லாத அறைக்கு ₹7,000 மற்றும் ஏசி அறைக்கு ₹8,000 எனவும், 2 பேருக்கான ஏசி இல்லாத அறைக்கு ₹8,000 மற்றும் ஏசி வசதியுடன் கூடிய அறைக்கு ₹9,000 எனவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
விடுதிகளில் வழங்கப்படும் வசதிகளைப் பொறுத்து இந்த விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வால் ஏற்கனவே திணறி வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த வாடகை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
