தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை வாயிலாக நிபுணத்துவம் பெற்ற பட்டய கணக்கர், ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பயன்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை
அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும், பணமோசடி மற்றும் நிதி கையாடல்களை தவிர்க்க அரசு அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை .
அரசு துறைகளில், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்த தனி இணையதளம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு காகித அளவில் உள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தில் உள்ள 46 பிரிவு அலுவலகங்களுக்கு குரல் பதிவு செய்யும் கருவி வழங்கப்படும் என்ற அறிவிப்பும், மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் அமல்படுத்தப்படவில்லை.
அரசு சொத்துக்களை முறையாக கணக்கிட சொத்து மேலாண்மை மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், தணிக்கை துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையிலான உயர்மட்டக்குழு அறிக்கை வெளியிடும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தவில்லை.
மேலும், அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
