ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலராக உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அதிரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வதோதராவில் சர்தார்தாம் விடுதி வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், எரிபொருள் தேவையைக் குறைக்கவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிறுவனங்கள் மீண்டும் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மெட்ரோ ரயில் பயன்பாடு, கார் பூலிங் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த ஒத்துழைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரித்ததைத் தொடர்ந்து உலகளவில் பணவீக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
