முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார்.
திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க இபிஎஸ் முன்வந்தார். திமுகவுடன் இபிஎஸ் கூட்டணி பேசினார்.
எந்த தி.மு.க-வை எதிர்த்தோமோ அந்த தி.மு.க வின் ஆதரவோடு அ.தி.மு.க சார்பில் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனை பெரும்பாலான சட்டமன்ற உறுதிப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம்.
தவெக அரசை ஆதரிக்க வேண்டும் என்று அதிமுகவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
அ.தி.முக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஹரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலராக காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்ல, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க-வுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்” என்று பேசினார்.
