சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.” எனவும் தெரிவித்தார்.
இந்தப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியாக தி.மு.க.வின் பங்கு முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.தற்போது சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக உள்ளதால், எதிர்க்கட்சிகளின் குரல் சுதந்திரமாக ஒலிக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
