மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசை தி.மு.க.வினர் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். அதேபோல, சில எதிர்கட்சியினரும் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். இந்த சூழலில், ‘மத்திய அரசு’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மத்திய அரசு என்ற பதத்திற்கு அரசியலமைப்பில் எந்தவொரு இடமும் இல்லை. நாடாளுமன்ற குழுக்களும் ஒன்றிய அரசு என்ற பதத்தையே ஆதரித்திருக்கின்றன. ஆகவே, அனைத்து அரசாணை மற்றும் அரசுக் கோப்புகளிலும் உள்ள மத்திய அரசு என்கிற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், “இந்த இரு வார்த்தைகளுமே மாற்றி பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை. மேலும், இந்த விவகாரம் பொதுநல மனுவுக்கானது அல்ல” என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து நீதிபதி கூறிகையில், “இந்த பொதுநல மனுவில் என்ன இருக்கிறது? மத்திய அரசு என்று இருப்பதற்கும், ஒன்றிய அரசு என்று இருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியவில்லை. மத்திய அரசு, ஒன்றிய அரசு என 2 வார்த்தைகளையும் மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இரண்டில் நீங்கள் எப்படி குறிப்பிடுகிறீர்கள் என்பது பிரச்னையே அல்ல. நீதிமன்றத்திற்கு இதனை விட முக்கியமான பல விவகாரங்கள் உள்ளன. மேலும், இது பொதுநல மனுவே அல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.