வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், 39° முதல் 41° செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° முதல் 41° செல்சியஸ் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், அநேக இடங்களில் 37° முதல் 39° செல்சியஸ் வரையும், கடலோரப்பகுதிகளில் 33° முதல் 37° செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.