நீட் மறு தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது – தர்மேந்திர பிரதான் விளக்கம்!

Estimated read time 1 min read

டெல்லி : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யுஜி 2026 மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், “நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்த உடனேயே தேர்வை ரத்து செய்வதே சிறந்த முடிவு என்று நாங்கள் முடிவு செய்தோம். மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மோசடி நபர்கள் மற்றும் கல்வி மாஃபியாக்களின் சதிச்செயலால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு OMR தாள் முறைக்கு பதிலாக கணினி அடிப்படையிலான (Computer Based Test) முறையில் நடத்தப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். OMR முறையைவிட கணினி வழி தேர்வு முறை ஒப்பீட்டளவில் மிகவும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது” என்று விளக்கினார்.

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் யுஜி 2026 தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, முழு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நாடு முழுவதும் இருந்து சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்தச் சூழலில் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டும் NTA-வின் அதிகாரப்பூர்வ தளங்களை நம்புமாறு அறிவுறுத்தினார். இந்த அறிவிப்பு, மருத்துவக் கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் கணினி முறை தேர்வு, தேர்வு முறைகேடுகளை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author