கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, “இனிய மாலை வணக்கம் விஜய், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள். இளைஞர்களின் உணர்ச்சி வேகம் மிக அதிகமாக உள்ளது; அதேபோல், அவர்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமான உள்ளன. எனவே, அனைவரையும் நீங்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும்; அது மிகவும் முக்கியமானது. எங்களால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். தமிழக அரசுக்கு, கர்நாடக அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு இருக்கும்” என்று டி.கே.சிவக்குமார் உறுதியளித்தார்.
இந்த தொலைபேசி உரையாடலை டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜயுடன் தொலைபேசியில் உரையாடி, அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அத்துடன் நமது மாநிலங்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காகத் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் – கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, தேர்தலுக்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தமிழகம் வந்திருந்த டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், “தவெக தலைவர் விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதல்வரான பிறகு டி.கே.சிவக்குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
