நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாகவும், பிரசாரத்திற்குச் சிறார்களைப் பயன்படுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் விஜய், திமுக, அதிமுக மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வாசுகி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக மற்றும் அதிமுக ஆகிய முக்கியக் கட்சிகள் பெரிய அளவில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டன.
தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்திற்காகச் சிறார்களை (குழந்தைகளை) விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தியுள்ளார். தவெக கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று பெற்றோரை வற்புறுத்துமாறு குழந்தைகளை விஜய் தூண்டியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்த அரசியல் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களேயான நிலையில், முதல்வர் விஜய் மற்றும் பிரதான கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
