“தனியார் பள்ளிக்கு மட்டும் தான் அமைச்சரா?”.. அரசுப் பள்ளிகளின் அவல நிலையைப் பட்டியலிட்டுச் சீமான் அதிரடி தாக்கு..!!! 

Estimated read time 1 min read

தனியார் பள்ளிகள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உருக்கமாகப் பேசியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கண்டனங்களையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

“நகைகளை அடமானம் வைத்துத் தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர்; பள்ளி நடத்துவது இலாப கணக்கு அல்ல, புண்ணியக் கணக்கு” என்று அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளி முதலாளிகளுக்காகக் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துவதாகச் சீமான் சாடியுள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தரப் பெற்றோர்களுக்கு உதவ அமைச்சர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வினவியுள்ளார்.

தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப் பள்ளிகள் நடத்துவது பாவக் கணக்கா என்றும், எத்தனை தனியார் பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி தருகின்றன என்பதை அமைச்சர் கூற முடியுமா என்றும் அவர் கேட்டுள்ளார்.

தமிழகத்தில் 25 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், கழிப்பறை, குடிநீர், பாதுகாப்புச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளதாகவும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் படிக்கும் சூழலில், 37,554 அரசுப் பள்ளிகளில் வெறும் 52 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயில்வதைக் குறிப்பிட்டு, அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்றாமலும், காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமலும் தவெக அரசு காலம் கடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதைப் பார்க்கும்போது, இந்த அரசு ஏழை மக்களுக்கானதா அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா என்ற சந்தேகம் எழுவதாகவும், அமைச்சர் இனியாவது அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author