கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை மண்ணைக் கவ்வ வைத்த தன் மூலம் தமிழக மக்கள் ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் வழங்கிய தீர்ப்பைச் சரியான முறையில் புரிந்துகொண்டு முதல்வர் விஜய் இதுவரை சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதைச்செய்தித்தாள்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டதாகக் கூறிய அவர், தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள இந்த கூட்டணி ஆட்சி, 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்து மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கமாக குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அந்த உத்தரவு சிறைக்கு வர 8 முதல் 10 நாட்கள் ஆகும் என்று குறிப்பிட்ட சவுக்கு சங்கர், இந்த விஷயத்தில் முதல்வர் விஜய்யே நேரடியாகத் தலையிட்டு, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரத்து செய்ய உத்தரவிட்டதால் தான் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்ட ஆர்டர் புதன்கிழமையே கைக்கு வந்து இவ்வளவு சீக்கிரம் உங்களைச் சந்திக்க முடிந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் நாட்டில் என்ன நடந்தது என்பதை மக்கள் பார்த்ததால் தான் ஸ்டாலின் தோற்றார் என்றும், திமுக இனி ஆட்சிக்கு வராது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததால்தான் விஜய் வெற்றி பெற்றார் என்றும் அவர் விவரித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் சவுக்கு மீடியா ஊழியர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், தன் தாயாரின் அகால மரணத்தையும் தவெகவினரும் முதல்வரும் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் என்பதால், அருண் ஐபிஎஸ் மீது முதல்வர் விஜய் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
