முன்னாள் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததால் , அவரது மகனாகிய உதயநிதி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக திமுகவினரால் தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அரசியலில் தீவிரம் காட்டி வரும் அவர், சினிமா மூலம் தங்களது அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உள்ளார்.
உதயநிதி 3 தலைமுறை சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாத்தா கருணாநிதி , எழுத்தாளர் மற்றும் படத்தயாரிப்பாளராக இருந்தார். அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் 2008 ஆம் ஆண்டு ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தமிழ் சினிமா உலகில் நுழைந்தார்.
விஜய் நடித்த குருவி திரைப்படம் தான் உதயநிதியின் முதல் தயாரிப்பாக இருந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஆதவன் , மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு , இந்தியன் 2 , தக் லைஃப் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் விண்ணைத் தாண்டி வருவாயா , மங்காத்தா , பீஸ்ட் , டான், விக்ரம் , பொன்னியின் செல்வன் இரு பாகங்கள் , வாரிசு , துணிவு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக நுழைந்த அவர் , M. ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை , ஜனரஞ்சக அம்சம் மட்டுமே கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர் அவரது திரைப்படங்களில் சமூக நீதி , அரசியல் போன்றவை அதிகம் இருக்குமாறு கதைக்களம் அமைத்து நடித்து வந்தார்.
உதயநிதி தனது அரசியல் வாழ்க்கைக்கு தகுந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இறுதியாக மாரி.செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.உதயநிதியும் இதற்கு மேல் திரைப்படங்களில் தான் நடிக்கப் போவதில்லை , மாமன்னன் தான் தனது இறுதித் திரைப்படம் என்று அறிவித்திருந்தார்.
தற்போது சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ளதால் , அந்தக் கட்சியில் ஜென் Z தலைமுறையை கவரும் வகையில் அரசியல் செய்ய தீர்மானித்துள்ளனர். அதன் அடிப்படையில் கட்சியினர் இன்ஸ்டாகிராமில் கணக்குகளை திறந்து கருணாநிதியின் புகழை பரப்பி, அவரது சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.
விஜயின் வெற்றிக்கு காரணம் ஜென் இசட் தலைமுறையின் ஆதரவு தான் என்றும் , இன்ஸ்டாகிராம் இந்த வெற்றிக்கு பெரிய அளவில் உதவியதாக அவர்கள் நினைக்கிறார்கள். உதயநிதியின் சினிமா ரீ எண்ட்ரி அவர்களின் அரசியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கா? என்று விவாதங்கள் தொடங்கியுள்ளது. அதே நேரம் உதயநிதி மீண்டும் திரையில் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
