“இடுப்பு வலிக்கு விந்தணு மருந்து”… மருத்துவ உலகையே அலற வைத்த விசித்திர வழக்கு…!! 

Estimated read time 1 min read

அயர்லாந்து நாட்டில் நாள்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அதற்குப் பரிகாரமாகத் தனது சொந்த விந்தணுவை (Sperm) கடந்த 18 மாதங்களாக ஊசி மூலம் கையில் செலுத்தி வந்த வினோத விபரீதம் உலக மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. ‘ஐரிஷ் மெடிக்கல் ஜர்னல்’ என்ற மருத்துவ இதழில் இந்த விசித்திர விபரீத வழக்கு அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடுப்பு வலியை குணப்படுத்த விந்தணுவை உடலில் செலுத்திய உலகின் முதல் விசித்திர வழக்கு இதுவென மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் இடுப்பு வலிக்காக மருத்துவமனைக்கு வரவில்லை. மாறாக விந்தணுவைச் செலுத்திய கையில் ஏற்பட்ட கடுமையான வலி, வீக்கம் மற்றும் கட்டியின் காரணமாகவே அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது கையைச் சோதனை செய்தபோது, தோலின் கீழ் காற்று புகுந்திருப்பதும், தசை மற்றும் இரத்த நாளங்கள் முழுவதும் சீழ் பிடித்துக் கடுமையான தொற்று ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளம் மூலம் ஊசியை வாங்கி, தனது விந்தணுவை மூன்று டோஸ்களாக தசை மற்றும் நரம்புகளுக்குள் செலுத்தியதை அந்த நோயாளி ஒப்புக்கொண்டுள்ளார்.

உடலுக்குள் செல்லும் விந்தணுவை நோய் எதிர்ப்பு மண்டலம் முற்றிலும் அன்னியப் பொருளாகக் கருதித் தாக்கத் தொடங்குவதால், இது போன்ற உயிருக்கே ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன. இதனையடுத்து அந்த நபருக்குத் தீவிர ஆன்டிபயாடிக் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இடுப்பு வலி சற்று குறைந்தவுடன் அவர் மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பாதியிலேயே மருத்துவமனையை விட்டு ஓடியுள்ளார். இணையத்தில் உலா வரும் இது போன்ற போலி ‘மாற்று மருத்துவ’ முறைகளை நம்பி ஆபத்தான சோதனைகளில் ஈடுபட வேண்டாம் என மக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

More From Author