ஸ்ரீ ராம நவமி தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீ ராம நவமி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலின் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே புனித நீராடி விட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை யொட்டி கோவிலில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.